Monday, 24 May 2021

அனுராதபுர கால கட்டடங்கள்

அனுராதபுர கால கட்டடங்கள்


கி.மு 4ம் நூற்றாண்டில் ஆரிய விஜயனின் வருகையினைத் தொடர்ந்து இலங்கையினுடைய வரலாறு அறியப்படுகின்றது. மகாவம்சம், தீபவம்சம் , சூளவம்சம் போன்ற இலக்கியங்களில் இவ் வரலாறுகள் தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றன. இலங்கையில் பௌத்த மதத்தின் வருகையைத் தொடர்ந்தே ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட பண்பாடு உருவாக ஆரம்பித்தது. பௌத்தத்தின் வருகையானது இலங்கையினுடைய அரசாட்சி உருவாக்கம், பண்பாட்டு உருவாக்கம், கலைகளின் வளர்ச்சி, மக்களுடைய வாழ்க்கை முறை, சமய ஒழுங்கு முறைகள், என்று பலவற்றை உருவாக்கி இருக்கின்றது. பௌத்தமதம் உருவான இந்தியாவைக் காட்டிலும் அதனுடைய தாக்கம் இலங்கையிலேயே அதிகமாகக் காணப்படுகின்றது. அந்த வகையில் அனுராதபுர காலத்து நினைவுச் சின்னங்கள் பௌத்த மதம் சார்ந்ததாகவே அதிகம் அடையாளம் காணப்படுகின்றன.


    அனுராதபுர காலத்து நினைவுச் சின்னங்கள் இலங்கையின் பல இடங்களிலும்    பரவலாகக் காணப்படுகின்றன.  கி.மு 377 ஆம் ஆண்டில் ஆரிய மரபினரான பண்டுகாபயனால் உருவாக்கப்பட்டு கி.பி 10ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதி வரை நீடித்திருந்தது.  கிமு நான்காம் நூற்றாண்டில் தேவநம்பியதீசன் ஆட்சிக்காலத்தில் மஹிந்ததேரர் இலங்கைக்கு வருகை தந்ததுடன் பௌத்த சமயத்திற்கான அஸ்திவாரம் இங்கே இடப்பட்டது. இதனை ராஜகலக் கல்வெட்டு உறுதிப்படுத்துகின்றது. அதனைத் தொடர்ந்து பலர் பௌத்த சமயத்தை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கு வருகை தந்தனர்.


மஹிந்த தேரர் மற்றும் அவரைத் தொடர்ந்து வந்த அனைவரும் வட இந்தியாவில் மௌரிய வம்சத்தைச் சேர்ந்தவர்களாக காணப்படுகின்ற படியால் அவர்கள் மூலம் கொண்டுவரப்பட்ட பௌத்த மதத்தோடு மௌரியக் கலைகளும் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன. பிற்பட்ட காலப் பகுதிகளில் ஆந்திர, குப்த, பல்லவ கலை வடிவங்களும் கொண்டுவரப்பட்டன.  அந்த வகையிலே தூபிகள், விகாரைகள், குகைக்கோவில்கள், மடங்கள், என்று பல கட்டிடங்கள்   அமைக்கப்பட்டன. குறிப்பாக இந்தியாவின் பண்டைய விகாரைகளான காஞ்சி வரகுத் என்பவற்றின் அம்சங்களிலேயே இலங்கையின் ஆரம்பகால விகாரைகள் உருவாக்கப்பட்டன. 

 ஆரம்பகால அனுராதபுரத்தில் இவ்வாறு அமைக்கப்பட்ட கட்டடங்களில். தூபராம தாதுகோபம், அபயகிரி விகாரை, ருவான்வெலிசாய, ஜேதவனராமய போன்ற மிகப்பெரிய புகழ்மிக்க விகாரைகள் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை இன்றும்கூட கவர்ந்து வருகின்றன. விகாரைகள் மட்டுமல்லாது அக்காலத்து தானசாலைகள், வைத்தியசாலைகள், பிரிவெணாக்கள், சைத்தியம், போதி மனை, சிலைமனை மற்றும் ஆரம்பகால குகைகள், நீர்த்தடாகங்கள், அணைக்கட்டுகள் போன்ற பல கட்டடக் கலை அம்சங்கள் அனுராதபுர இராசதானி காலத்தில் அமைக்கப்பட்டிருந்தன.



அனுராதபுர கால குகைக் கோவில்கள்

                    ஆரம்ப காலங்களில் பௌத்த பிக்குகள் இயற்கையாக அமையப்பெற்ற குகைகளில் தங்கி தம்முடைய சமய நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இயற்கைக் குகைகளில் மழை நீர் உட்புகாத வண்ணம் தூபிகள் அமைக்கப்பட்டது. அனுராதபுர காலத்தில் பல குகைகள் பௌத்த பிக்குகள் வசிப்பிடமாக பயன்படுத்தப்பட்ட போதிலும் அவற்றில்   தம்புள்ளை, மிஹிந்தலை, ரிதிகல, சிகிரியா போன்ற குகைகள் முக்கியமானவையாகக் காணப்படுகின்றன. இக்குகைகள் பிற்காலம் வந்த ஆட்சியாளர்களால் மாற்றி அமைக்கப்பட்டு ஓவியங்கள் தீட்டப்பட்டும் சிலைமனைகளாகவும் உருவாக்கப்பட்டன. .

தம்புள்ளை பொற்கோவில் 

இலங்கையின் மத்திய மாகாணம் மாத்தளை மாவட்டத்தில் காணப்படுகின்ற ஒரு குடைவரைக் கோயிலாக இது காணப்படுகின்றது. கொழும்பிலிருந்து 148 கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ளது. இலங்கையினுடைய மிகப்பெரிய குகை கோவிலாக அடையாளம் காணப்படுகின்ற தம்புள்ளைக் குகைக் கோவிலானது. சுற்றியுள்ள சமவெளிகளில் மொத்தமாக 160 மீட்டர் உயரம் கொண்ட பாறையில் இது அமைந்துள்ளது. மொத்தமாக 80 அடையாளப்படுத்தப்பட்ட குகைகள் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன. இருப்பினும் ஐந்து குகைகளில் மாத்திரமே ஓவியங்களும் சிற்பங்களும் அமையப் பெற்றிருக்கின்றன.


புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய பல சிற்பங்களும் ஓவியங்களும் காணப்படுகின்றன. மொத்தமாக 153 புத்த சிலைகள் 3 இலங்கை அரசர்களுடைய சிலைகள் பிற்காலத்தில் விஷ்ணு மற்றும் பிள்ளையார் சிலைகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன. இங்கே அனுராதபுர கால பௌத்த பிக்குகள் வாழ்ந்தமை குறிப்பிடப்படுகின்றது. அத்தோடு 2700 ஆண்டுகளுக்கு முன்னதான மனித படிமங்கள் காணப்படும்  இபன்கட்டுவ பிரதேசமும் இதன் அருகிலேயே காணப்படுகின்றது. இதனுடைய சிறப்புத் தன்மை காரணமாக 1991 ல் UNESCO உலக மரபுரிமைத் தளமாக பிரகடனப்படுத்தப்பட்டது இன்றைக்கு அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக இது காணப்படுகின்றது.


மிகிந்தலை குடைவரைக்  கோயில் 

https://www.lanka-excursions-holidays.com/mihintale-sightseeing.html

முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தேவநம்பியதீசனும் மஹிந்ததேரரும் சந்தித்த இடமாக பௌத்த மக்களால் இது நம்பப்படுகின்றது. பௌத்த சமயத்தவர்களின் மிக முக்கியமான யாத்திரைத் தலமாகவும் காணப்படுகின்றது. 

சிகிரியா குகைகள் 



இலங்கையின் முதன்மையான சுற்றுலா மையமாக இது கணிக்கப்படுகின்றது. உலகின் எட்டாவது அதிசயமாகக் கருதப்படுகின்ற சிகிரியாக் குன்று. கிபி ஆறாம் நூற்றாண்டில் தாதுசேனன மன்னனின் இரண்டாவது மகனான காசியப்பனால் உருவாக்கப்பட்ட மிகப் பாதுகாப்பான நகரமாகும்.  1144 அடி உயரம் கொண்ட குன்றின்மீது கோட்டை கட்டி அங்கே நீர்நிலைகள், பூங்காக்கள்,அகழிகள்  என்பவற்றை உருவாக்கி அதிசயிக்கத்தக்க கட்டுமானங்களோடு இந்த நகரம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே காணப்படும் குகைகளில் பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன அவற்றில் ஒருசில மாத்திரமே தற்பொழுது எஞ்சியுள்ளன. குன்றின் அடிப் பாகத்திலும். இடைப்பகுதியிலும் குகைகள் காணப்படுகின்றன. இங்கே காணப்படும் குகைகளில். ஆரம்ப கால பௌத்த பிக்குகள் வசித்தமைக்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

விகாரைகளோடு இணைந்தும் அவற்றை அண்மித்தும் பல குகைகள் காணப்படுகின்றன. அளுவிகாரை பாறை கோவில், அஸ்கிரிய ராஜ மகாவிகாரை குகைக்கோவில், முல்கிரிகல ராஜமகா விகாரை,நிக்கசல அறன்யசேனாசனய போன்ற இடங்களில் காணப்படுகின்ற குகைக் கோவில்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.  

அனுராதபுர கால தூபிகள்/தாதுகோபங்கள்

தூபிகள் சேத்திய,சாய என்றும் அழைக்கப்படுகின்றன. தாதுகோபுரம் எனப்படுவது ஒரு விகாரையின் மிகப் புனிதமான பகுதியாகும்.. புத்தரின் சரீரப்பகுதிகள் அல்லது அவரால் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்பவற்றை வைத்து கட்டப்பட்ட வழிபாட்டு நினைவுச்சின்னமாகக் காணப்படுகிறது. இக்கட்டுமானம் மூன்று பிரதான பகுதிகளைக் கொண்டது. அவை அடித்தளம், அண்டம், தூபி என்பனவாகும். அடித்தளத்தின் மேல் அரைக்கோள வடிவில் அமைக்கப்படுவது அண்டம் எனப்படுகிறது. இது மணி வடிவம், பானை வடிவம், குமிழி வடிவம், தாமரை வடிவம், நெற்குவியல் வடிவம், நெல்லிக்காய் வடிவம் என்று பல்வேறு வகைகளில் அமைக்கப்படும். அண்டத்தின் மேலுள்ள பகுதி தூபி எனப்படுகின்றது.

பௌத்த தூபிகளில் மிகப் பழமையானதாக அசோகச் சக்கரவத்தியினால் அமைக்கப்பட்ட காஞ்சிதூபி கிறிஸ்துவுக்கு முன் நான்காம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. அதனை அடிப்படையாகக் கொண்டே இலங்கையிலும் தாதுகோபங்கள் கட்டப்பட்டன. இலங்கையில் பௌத்த மதத்தின் வருகையின் பின்னர் மன்னன் தேவநம்பியதீசனால் தூபராமதூபி அமைக்கப்பட்டது. இதுவே இலங்கையின் மிகப் பழமையான தூபியாகக் காணப்படுகிறது. பின்னர் பல தூபிகள் பல்வேறு மன்னர்களாலும் அமைக்கப்பட்டன. அவ்வாறு அமைந்த தூபிகளில் மிகப்பெரியதாக ஜேதவனராமய காணப்படுகிறது. .

ருவான்வெலிசாய

twitter.com
ருவான்வெலிசாய இலங்கையின் மூன்றாவது பெரிய தூபியாகக் காணப்படுகின்றது. கிறிஸ்துவுக்கு முன் 140 ஆம் ஆண்டுகளில் மன்னன் துட்டகைமுனுவால் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அவனுடைய சகோதரனான தீசனால் நிறைவேற்றப்பட்டது. உலகளாவிய ரீதியில் காணப்படும் பௌத்தர்களின் எட்டு முக்கிய யாத்திரைத் தலங்களில் இதுவும் ஒன்றாகக் காணப்படுவதால் அதிகமான மக்கள் இங்கு வருகை தருகின்றனர். கால ஓட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக காடுகள் சூழ்ந்து அதிக அளவில் பாதிக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இது இலங்கை அரசாங்கத்தின் முயற்சியால் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டது. 



தூபராம தூபி

இது இலங்கையில் முதன் முதலில் அமைக்கப்பட்ட தூபியாகக் காணப்படுகிறது. மன்னன் தேவநம்பிய தீசனால் அமைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுராதபுரம் மகாமேகவனப் பூங்காவின் மத்தியில் காணப்படுகின்ற ஒரு முக்கிய கட்டுமானமாகவும் தொல்லியல் மையமாகவும் காணப்படுகின்றது. தேவநம்பியதீசனால் கட்டப்பட்டாலும் கால ஓட்டத்தில் பல பாதிப்புகளை அடைந்து முற்றுமுழுதாக சிதைவடைந்து இரண்டாம் மகிந்தன் காலத்தில் இதனை முதன் முதலாக மீள்கட்டுமானம் செய்வித்தான் பின்னர் 1842 ஆம் ஆண்டு தற்போது இருக்கின்ற கட்டுமானம் உருவாக்கப்பட்டது.

அபயகிரி விகாரை

wikipedia
இலங்கையிலே காணப்படுகின்ற மிகப்பெரிய ஸ்தூபிகளில் இதுவும் ஒன்றாகக் காணப்படுகின்றது. உலகில் காணப்படுகின்ற மிகப் பாரிய இடிபாடுகளில் ஒன்றாக இது அடையாளப்படுத்தப்படுகிறது. அனுராதபுர நகரத்தின் வடக்கு பகுதியில் உயர்ந்த மதில்களால் சூழப்பட்ட நீராடுவதற்காக குளங்களையும் அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்ட அழகிய கட்டடங்களையும் கொண்டதாக அபயகிரி விகாரை அமைந்திருக்கின்றமை தனிச் சிறப்புடையதாகக் காணப்படுகின்றது. அனுராதபுரத்தில் இருந்த 17 சமய நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய அபயகிரி விகாரை அவற்றுள் முக்கியமான ஐந்து விகாரைகளில் மிகப்பெரியதாகும். அக்காலகட்டத்திலேயே உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பௌத்த மதம் சார்ந்த அறிஞர்களும் ஆசிரியர்களும் இங்கு அதிகம் வருகை தருவதுண்டு இதனுடைய கிளை நிறுவனங்களின் ஊடாக நடைபெற்ற செயற்பாடுகளில் தாக்கத்தை இன்றும் உலகின் பல பகுதிகளில் அறியமுடிகின்றது.


இதனுடைய கட்டட நுட்பமானது அக்காலத்து சமூக நிலைப்பாட்டின் வெளிப்பாட்டை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது. அக்காலகட்டத்தில் இந்து சமயம் சார்ந்த கலை பண்பாடு இவ்விகாரையில் தாக்கம் செலுத்தி இருக்கின்றமை காணமுடிகின்றது. இதனுடைய நுழைவாயில் கட்டுமானமானது ஒரு பாதுகாவலர் தெய்வத்தின் பாதுகாப்பின் கீழ் அமையுமாறு கட்டப்பட்டுள்ளது   இங்கு அமைக்கப்பட்டுள்ள காவற் கணங்களும் இந்து பண்பாட்டினைத் தழுவியதாகக் காணப்படுகின்றது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட காவற் கற்களில்  இவ்விகாரையில் காணப்படுபவை  மிகச்சிறப்பானதாகக் குறிப்பிடப்படுகிறது. 


ஜேதவனராமய

wikipedia.com
அனுராதபுர காலகட்டத்திலும் சரி இலங்கையின் பௌத்த சமய வரலாற்றிலும் சரி மிக முக்கியமான தூபியா இது காணப்படுகின்றது. அனுராதபுரத்தின் மன்னனான மகாசேனன் கிபி 273 தொடக்கம் 301 வரையான காலப்பகுதிகளில் கட்டியதாகக் குறிப்பிடப்படுகின்றது. இலங்கையின் அதிக உயரம் கொண்ட தூபியாகவும் பண்டைய உலக வரலாற்றில் காணப்படுகின்ற உயர்ந்த கட்டிடங்களில் ஒன்றாகும் அடையாளம் காணப்படுகின்றது. இது 400 அடி உயரம் கொண்டது. இதன் அடிப்பரப்பு 2 லட்சத்து 33000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. 93.3 மில்லியன் செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. மூன்று அடுக்குகளைக் கொண்ட அடித்தளத்தின் மேல் நெற்குவியல் வடிவிலான அண்டம் அமைக்கப்பட்டு அதன்மேல் சதுர வடிவிலான அடித்தளத்தில் கூரான ஒடுங்கிச் செல்லும் தூபி அமைக்கப்பட்டுள்ளது. இது மகாயான பௌத்த பிரிவு மன்னன் மகாசேனன் காலத்தில் ஏற்பட்டதன் காரணமாக மகாயான பிரிவின் மத்திய ஸ்தலமாக அமைக்கப்பட்டு இன்றும் இதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன..



லோவமகாபாய

reddit.com
லோவமகாபாய பிரசன் பேலஸ், லோக பிரசாத என்னும் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. இது நூற்றுக்கணக்கான தூண்களைக் கொண்டு அமைக்கப்பட்ட அனுராதபுர கால கட்டட இடிபாடுகள் ஆகும். ருவான்வெலிசாய விற்கும் அனுராதபுரம் வெள்ளரசமரம் அமைந்தி இருக்கும் இடத்திற்கும் இடையில் காணப்படும் இது. கிறிஸ்துவுக்கு முன் இரண்டாம் நூற்றாண்டில் துட்டகைமுனு மன்னன் அமைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. இக் கட்டிடம் refractory ஒன்றுகூடல் மண்டபம், chapter house போன்றவற்றை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டிருந்தது. இதனுடைய கூரை bronze ஓடுகளைக் கொண்டு காணப்பட்டது. 400 அடி பரப்பளவைக் கொண்ட இக்கட்டடம் 40 வரிகளில் 40 தூண்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றது. மொத்தமாக 1600 தூண்கள் இங்கே காணப்படுகின்றன. அதில் அதிகளவான வை முழுமையான நிலையில் உள்ளன. இதனுடைய அக்கால கட்டுமானமானது அதிசிறந்த வேலைப்பாடுகளைக் கொண்டு காணப்பட்டதாகக் கூறப்பட்டாலும். தற்காலம் இங்கே அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான கட்டடம். மகா விகாரையின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது. 

ரத்ன பிரசாத

இதுவும் அனுராதபுர கால கட்டத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மடம் ஆகும். அழகாகச் செதுக்கப்பட்ட கற்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட கட்டுமானங்களில் உபோசாதாவீடு (தீட்டுப்பட்ட மனதை சுத்தம் ஆக்குவதற்கான இடம்) என்று குறிப்பிடப்படுகின்றது கிபி 192 தொடக்கம் 194 ஆம் ஆண்டில் மன்னன் கனிஸ்டதீசனால் கட்டப்பட்டது. முதலில் கட்டப்பட்ட கட்டிடமானது ஏழு மாடிகளைக் கொண்ட கட்டிடம் என்று குறிப்பிடப்படுகின்றது. வாயிலில் தூண்கள் அழகிய கற்கள் தங்கத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலை போன்றன இங்கே காணப்பட்டன.

இப்போது அதிக அளவில் சேதமடைந்து இருக்கின்ற போதிலும் அவற்றில் சில பண்டைய ஒற்றைத் தூண்கள் மற்றும் நுழைவாயிலில் காணப்படும் கற்கள் புராண டிராகன் உருவம் கொண்ட உருவம் ஒரு வகைக் குள்ள மனிதர்களின் உருவம் போன்ற அம்சங்கள் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்கின்றன. இங்கே காணப்படும் காவலர்கள் சிற்பம் அரிதானதாகக் கருதப்படுகின்றது. இடிபாடுகளில் காணப்படும் சிற்பங்கள் அதிசிறந்த நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கின்றன.  இதன் அழிபாடுகளைக் கொண்டு இக்கட்டடம் மிகப் பிரம்மாண்டமானதாக இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


மகாபாலி பிச்சை மண்டபம்

www.attractionsinsrilanka.com
இக்கட்டிடம் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் மன்னன் தேவநம்பிய தீசனால் கட்டப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. கிபி 10ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று இங்கே காணப்படுகின்றது. இதனுடைய பெயர் பற்றி குறிப்பிடப் படுகின்றது. அது மட்டுமன்றி சீனத் துறவியான டெய்ன் தேறோ  என்பவர். இங்கே 5000 முதல் 6000 வரையான மக்களுக்கு உணவு பரிமாறப்பட்டுள்ளதாக பதிவு செய்துள்ளார். இதேபோல் சீனப் பயணி ஹியன்சன் நீரோ ராஜாவின் அரண்மனைக்கு அருகில் கட்டப்பட்ட ஒரு சமயலறையிலிருந்து 500க்கும் மேற்பட்ட துறவிகளுக்கு அவர் பிச்சை வழங்கியுள்ளார். துறவிகள் தங்களது பிச்சையின் பகுதியை ஒரு வரியில் ஒழுங்காகப் பெற நகர்வது மகாபலி என்ற சொல்லின் பொருள் என்கின்றார். இது போன்ற மடங்கள் பிற்கால மன்னர்களும் பல அமைக்கப்பட்டன. இந்த மண்டபம் இரண்டாம் உதய மன்னரால் அளிக்கப்பட்டு சோழரின் படையெடுப்புகளில் முற்றாகச் சிதைவடைந்து. .


குட்டம் பொக்குண இரட்டைப் பொய்கை

lakpura.com
அனுராதபுர கால கட்டடக் கலைகளில் நீர்நிலைகள் மிகச் சிறந்தவையாக் காணப்படுகின்றன. அந்த வகையிலே குட்டம் பொக்கினையும் அனுராதபுர கால ஒரு மிகச்சிறந்த கட்டடக்கலை அம்சமாகும். இது அபயகிரி விகாரைக்கு அண்மையில் மகாமேகவனப் பூங்கா வளாகத்தில் அமையப் பெற்றிருக்கின்றது. கற்களிலான அலங்கார வேலைப்பாடுகள் மிகவும் சிறப்பானதாகக் காணப்படும். இது அந்தக் காலகட்டங்களில் பல துறவிகள் நீராடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இரட்டைக் குளமாக அருகிலுள்ள குளத்துடன் இணைந்ததாகக் காணப்படுகின்றது. மிகச் சிறந்த சிற்பங்கள் பல இங்கு அமைக்கப்பட்டுள்ளன . இதன் வெளிப்பகுதி செதுக்கப்பட்ட கிறைனட்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளது. நுழைவாயில்களில்   நேர்த்தியாக நாக உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இப் பொய்கைக்கு வசபக் குளத்தில் இருந்து குழாய்கள் மூலம் நீர் கொண்டு வரப்படுகின்றது. இங்கே காணப்படும் கட்டிடக்கலை அம்சங்களைப் பார்வையிடுவதற்கும். இப்பகுதியின் கால நிலைக்கும் பல சுற்றுலாப் பயணிகள் ஈர்க்கப்பட்டு இங்கே வருகை தருகின்றனர்.


அனுராதபுர கால பண்டைய மருத்துவமனை

இது மிகிந்தலையில் காணப்படும் பண்டைய மருத்துவ நிலையமாகக் குறிப்பிடப்படுகின்றது. ஐந்தாம் நூற்றாண்டில் விஜயம் செய்த மகாயான பாதிரியாரான fa-hsinen இங்கே இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பிக்குகள் இருந்ததாகத்  தெரிவிக்கின்றார். இவற்றினுடைய அழிபாடுகள் பிற்கால அனுராதபுரத்தில் இரண்டாம் சேன மன்னனால் உருவாக்கப்பட்டவை. ஆனால் இதற்கு முன்னரே பௌத்தர்களுக்காக மிகிந்தலையில் மருத்துவமனை அமைப்பு காணப்படுவதை அறிய முடிகின்றது. 

மருத்துவமனையில் உட்பகுதி   புத்தர் சன்னதியை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அதனைச்சுற்றி நோயாளிகளுக்கான அறைகள் காணப்படுகின்றன ஒவ்வொரு அறையிலும் சந்நிதியை எதிர்கொண்டு சுமார் 10*10 அடி அளவு கொண்ட முலைகளின் பெரிய அறைகள் உள்ளன. வடகிழக்கு மற்றும் கிழக்கு அறைகளில் மருத்துவத் தொட்டி காணப்படுகின்றது தெற்கு பகுதியில் மன்றம் ஒன்று காணப்படுகிறது அதற்கூடாக நீர் மற்றும் நீராவி குளியல், அரைக்கும் கல் ஒரு மருந்தகம் என்பன இருந்தமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன. 

அனுராதபுர கால பாலங்கள்

destimap.com
கட்டடங்கள் மட்டுமல்லாது அக்காலத்தில் மிகத்துல்லியமான முறையில் கற் பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவை அக்கால மக்களின் மிகச்சிறந்த வீதி அமைப்பு மற்றும் பாலம் கட்டுதல் தொடர்பான அறிவை எடுத்துக் காட்டுகின்றன. குறிப்பாக அனுராதபுரத்திலிருந்து குட்டம்பொக்குணைக்குச் செல்லும்   பாதையில் இல்பாண என்கின்ற கிராமத்தில் இந்த பண்டைய பாலம்  அமைந்திருக்கின்றது. அனுராதபுர காலகட்டத்தைச் சேர்ந்த. இந்தப் பாலத்தில் மல்வத்து ஓயாவைக் கடக்கும் விதமாக நீர் மட்டத்திலிருந்து 10 அடி உயரம் கொண்ட கற்தூண்கள் மேல் அமைக்கப்பட்ட பாலம் ஒன்று காணப்படுகின்றது. ஏறத்தாழ 50 மீட்டர் நீளம் வரை  இப்பாலம் அமைக்கப்பட்டிருந்த போதும் இப்பொழுது ஒரு சில மீட்டர்களே மீதமாக உள்ளன. இப்பாலத்தை பார்வையிடும்  பொழுது அக்காலக் கட்டுமானக் கலையின் அபிவிருத்தியையும் சிறப்பையும் அறிய முடிகின்றது.

 சந்திரவட்டக்கல்

www.steuartholidays.com
அனுராதபுர காலகட்டத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான கட்டடங்களில் இந்த சந்திரவட்டக்கல் காணப்படுகின்றது. குறிப்பாக வாயில் படிகளாக இவை பயன்படுத்துகின்றன. கிபி எட்டாம்,பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கை கலை நினைவுச் சின்னங்களில் இது மிக முக்கியமான இடம் பெறுகின்றது. இதிலே பாலாபெட்டி என்று சொல்லப்படுகின்ற உட்பகுதி வடிவமைப்புகளில்      உலகம் நெருப்பில் இருப்பதைக் குறிப்பதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திர வட்டக்கல்லில் காணப்படுகின்ற வெளிப்புற வட்டம் நெருப்பு அலைகளைக் குறிக்கின்றது. அதற்கு அடுத்ததாக யானைகள், குதிரைகள், சிங்கம், மற்றும் யாளி  உருவங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் காணப்படுகிறது. இப்படி 13 விலங்குகளின் ஊர்வலத்தை மீண்டும் மீண்டும் உருவாக்குவதாக இந்த அமைப்பு காணப்படுகின்றது. இப்படிப்பட்ட விசித்திரமான கலை வெளிப்பாடுகளைக் கொண்ட சந்திரவட்டக்கல் அனுராதபுர கால கட்டங்களில் பல கட்டடங்களில் பயன்படுத்தப்பட்டு இருப்பதன் காரணமாக இங்கே வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இது குறிப்பிடப்படுகிறது.




Monday, 3 May 2021

சிறாப்பர் மடம்


 

தமிழ் பண்பாட்டில் மடங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அந்த வகையில் சிறப்பர் மடம் இலங்கையில் தனிச்சிறப்புடையது. யாழ்பாணம் வடகரையில் அமைந்திருக்கும் கீரிமலையின் தொன்மையினை எடுத்தியம்பும் நகுலேஸ்வர ஆலயத்தின் வடக்கில் சைவப்பண்பாட்டின் கலை  அம்சங்களை வெளிப்படுத்தி யாழ்ப்பாணத்து  மட கட்டிடக்கலையின் சிறந்த வெளிப்பாடாகவும் ஆன்மீக தேடலுடையோரின் சேவை மையமாகவும் இம்மடம்  காணப்படுகின்றது. 18 ம் நூற்றாண்டுகளில் நகுலேஸ்வர தண்ணீர் பந்தல் என்னும் பெயரில் ஆரம்பிக்கப்படட இம்மடமானது தற்போதைய கலகட்டத்தில் இலங்கையின் மிகப்பெரியதும் தொன்மை வாய்ந்ததுமாகத் திகழ்கிறது. சைவ சமய யாத்திரிகர்கள், உள்நாட்டு, வெளிநாட்டுப்  பயணிகள் மற்றும் சான்றோர்களிற்கு இம்மடம் ஆற்றிய பணிகள் ஏராளம் .

மடத்தின் பிரதான நுழைவாயில் 



வருடத்தின் எல்லா நாட்களிலும் 24 மணிநேரமும் தாகம் என வருவோரிற்கு மோர் வழங்குதல். நாடி வருவோரிற்கு நாளாந்தம் அன்னதானம் வழங்குதல். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு (சிங்கப்பூர் மலேசியா போன்ற ) யாத்திரீகர்களுக்கு இலவசமாக தங்குமிடம் வழங்குதல். கந்தபுராண படலம் மற்றும் சமய தினங்களை சுற்றத்தில் உள்ளவர்களுடன் இணைந்து அனுஸ்டித்தல். என இம்மடத்தின் பணிகள் அன்றைய காலகட்டத்தின் தேவைகளுக்கும் மக்களின் வாள்வியலுக்கு மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக இருந்தது. 

யாழ்ப்பாணத்தின் பரம்பரியத்துடன்  கூடிய ஒரு கடடடக்கலை அம்சத்தை பார்வையிட விரும்புவோர் இங்கு வந்து பார்வையிட முடியும். வடக்கு நோக்கி அமைந்துள்ள இதன் வாயில் பகுதி மிக நுட்பமான பண்டைய கட்டடக்கலை அம்சத்தில் அமைந்த நுழைவாயிலைக் கொண்டது.சிற்பங்கள் அலங்கார வேலைப்பாடுகள்,இயற்க்கை மூலப்பொருட்களை பயன்படுத்தி தீட்டப்பட்ட வர்ணங்களும் அங்கங்கே தென்படுவதைக் காணலாம். வேறு  இடங்களில் காண முடியாத யாளி உருவம் இங்கே காணப்படுகிறது. இந்த வாயில் கோபுரம் சிதைவுகளிட்கு உள்ளாகி இருந்தாலும் இன்று வரை அதன் கம்பீரம் மற்றும் அழகு என்பன மாறாமல் இருக்கின்றது. 

நுழை வாயிலிட்கும் கட்டடத்திட்க்கும் இடையில் பிரதான நடை பாதை  காணப்படுகின்றது.   வடிவத்தில் இரண்டு புறமும் இது செல்கிறது. தற்சமயம் இதன் இரண்டு பக்க திண்ணைகளே காணக்கூடியதாக உள்ளன. அவற்றில் இருந்து வட்ட வடிவ தூண்கள் அமைக்கப்பட்டு மேல் கூரை அமைந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன. செங்ன்கற்களை மாத்திரம் பயன்படுத்தி இந்த தங்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.  நுழை வாயிலின்வலது புறமாக தண்ணீர் மண்டபம் காணப்படுகிறது . இதில் இரண்டு அறைகள் திண்ணை தூண்களின் மேல் சின்பங்கள் போன்றன பழமையான பாரம்பரியத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

மடத்தின் பிரதான கட்டடம் நாச்சார வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. முற்றம் நடுப்பகுதியில் காணப்படுகிறது.முற்றத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இரண்டு புறமும் அறைகள் காணப்படுகின்றன தென் மேற்கு மூலையில் விநாயகர் வழிபட்டு அறை காணப்படுகின்றது.  சிலையானது மிகவும் பழமை வாய்ந்ததாகும் பார்ப்பதடற்கு மிக நேர்தியானதும் கம்பீரமானதுமான தோற்றம் கொண்டது.

கடடடத்தின் கிழக்கு பக்கமாக சமைக்கும் பகுதி காட்டப்படுகிறது. தெக்கு புறமாக ஒரு முற்றமும் அதனை அடுத்து விருந்தினர் தங்குவதற்கான அறைகளும் காணப்படுகின்றன. கட்டடம் மொத்தமாக சுண்ணாம்பு மற்றும் செங்கல் போன்றவற்றை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.சில இடங்களில் பொழியப்படட கருஙகற்கள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும் யாழ்ப்பாண பாரம்பரியத்தில் தனித்துவமான ஆவுரஞ்சி கல் மற்றும் நீர் தொட்ட்டி போன்ற காணப்படுகின்றன. இங்கே பார்வையிடும்போது யாழ்பாணப்பண்பாட்டின் பல்வேறு அம்சங்களை காண முடியும். ஒரு சிறந்த சுற்றுலா மையமாகத் திகள்வதற்கு எல்லாவிதமான தகுதிகளைக்கொண்டு காணப்படுகின்ற சிராப்பர்  மடம் இன்று கவனிப்பார் அற்று விடப்பட்டுள்ளமை காவலைக்குரிய விடயமாகும் .

மோர் வழங்கும் இடம் 




சுமை தாங்கி 

தண்ணீர் தொட்டி 

ஆவுரஞ்சி 


வாயில் படிக்கல் 



Saturday, 3 April 2021

ஜமுனா ஏரி

 

 

 யாழ்ப்பாணம் தனி  அரசாகத் திகழ்ந்த   கலகட்டங்களில் அமைக்கப்பட்ட பல நிர்மாணங்களில் ஒன்றாக ஜமுனா எரி குறிப்பிடப்படுகின்றது . பருத்தித்துறை வீதியில் சட்டநாததர் கோவிலில் இருந்து மிகக்குறுகிய தொலைவில் யாழ் வலயக்கல்வி அலுவலகத்தின் பின்புறமாக சிதைவடைந்த நிலையில் காணப்படும் இந்த ஏரி யாழ்ப்பாண தமிழ் அரசாட்சியின் பெருமையை எடுத்துரைக்கும் சான்றாகக் காணப்படுகின்றது. 

 

https://www.visittamileelam.com/Jamuna-Aeri.php


     இந்த ஏரி பற்றி  பலதரப்படடவர்களும் கருத்துக்களை முன்வைக்கின்றனர் ஆனாலும் இதுவரை ஆதாரபூர்வமான தகவல்கள் முன்வைக்கப்படவில்லை.  கி.பி 14ம் நூற்றாண்டே வட இலங்கையில் யாழ்ப்பாண அரசு நிறுவப்பட்ட கலப்பகுதியாகும்.  யாழ்ப்பாண அரசு பற்றி எடுத்துரைக்கும் யாழ்ப்பாணவைபவமாலை, கைலாயமாலை வையாபாடல் போன்ற நூல்களில் இந்த ஏரி  பற்றிய தகவல்கள் தெளிவாகக்  குறிப்பிடப்படவில்லை. குறிப்பாக இதன்  தோற்றம் அமைப்பு முறை என்பன பற்றி பலதரப்பட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. இவ்வேரி பற்றிய  தெளிவான தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கு அக்கால அரசியல் நிலை பற்றி முதலில்  விளங்கிக்கொள்ளவேண்டும்.

 

        14 ம் நூற்றாண்டு தென்னிந்தியாவில் நிலவி வந்த பாண்டியரின் ஆதிக்கம் வடக்கில் இருந்து வந்த முஸ்லிம்களின் படையெடுப்பால் வீழ்ச்சி கண்டது. பண்டிய மன்னன் குலசேகர பாண்டியன்  மகனான சுந்தர  பாண்டியன் தந்தையைக்  கொன்று அரசைக்  கைப்பற்றிக்கொண்டான். இதன் காரணமாக அவன் சகோதரன் வீர பாண்டியனுக்கும் சுந்தர பாண்டியனிற்கும் பிணக்கு ஏற்பட்டது . இதனால்  வீர பாண்டியன் சுல்தான்களின் உதவியை நாடினான். இதன் காரணமாக சுல்தான்களின் ஆதிக்கம் மதுரையில்  ஏட்பட்டு இறுதியில் பாண்டிய  தேசம் சுல்தான்களின் வசமானது. இதுவே யாழ்ப்பாண அரசு உருவாவதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது.

twitter.com

     முஸ்லிம்களின் ஆதிக்கத்தினால் பாண்டியப்பிரதானிகள் இலங்கைக்கு வந்து அரியச்சக்கரவர்திகள் எனும் பெயரில் ஆட்சியை நிறுவினர். இதனை யாழ்ப்பாணவைபவமாலை

  நாலு மதிலும் எழுப்பி 

 (கோட்டை மதில் )

 மாடமளிகையும் கூடகோபுரங்களும் 

(பாரிய மளிகை )

 பூங்காவையும் பூங்கா நடுவே ஸ்னான மண்டபமும் 

(ஜமுனா ஏரியைக்  குறிக்கின்றது )

மூப்புடைக்கூபம் உண்டாக்கி 

(இதன் பகர வடிவம் )

அக்கோபத்திலே ஜமுனா நதித்தீர்த்தமும் 

அழைப்பித்துக்  கலப்பித்தான் 

    என்றவாறு குறிப்பிடுகின்றார். சிங்கையாரியன்  என்கின்ற மன்னன் இவற்றை அமைப்பித்து பலம் வாய்ந்த அரசாக யாழ்ப்பாண ராசதானியை உருவாக்கினான் என்று ஆசிரியர் விளக்கிக்கூறுகின்றார். தேசசஞ்சரியான இபன்பதுதா இலங்கைக்கு வருகைதந்தபோது இங்கே ஒரு பலம் வாய்ந்த அரசு செல்வச்செழிப்புடன் விளங்கியதாக அவரது குறிப்புக்கள் தெரிவிக்கின்றன .

    இஸ்லாமியரின் ஆதிக்கத்தை ஒழிக்க சிதறிக்கிடந்த பாண்டியச் சிற்றரசர்கள் ஒன்றிணைந்து இஸ்லாமியரை வென்று விஜயநகரப்பேரரசை உருவாக்கினர். இதன் பின்னர் யாழ்ப்பாண ராஜதானி விஜயநகரப்பேரரசின் மேலாண்மையில் இருந்தது. அரியச்சக்கரவர்திகளின் ஆதிக்கம் இங்கே காணப்படடாலும்  அது எல்லா காலப்பகுதிகளிலும் நிலையானதாக அல்லாது பல்வேறு தளர்வுகளும் ஏற்பட்டன.  இவ்வாறான ஒரு அரசியல் பின்புலத்தில்தான்  ஜமுனா ஏரியின் உருவாக்கமும் நிகழ்ந்ததாகக்  குறிப்பிடப்படுகின்றது.

பெயர்  

    இந்த ஏரிக்கு ஜமுனா என்ற பெயர் சங்கிலிய மன்னனின் மனைவியான ஜமுனா என்பவர் இங்கு  குளித்ததன் காரணமாக உருவானதாக சில ஊடகங்கள் கருத்துத்  தெரிவிக்கின்றன. அனல் இக்கருத்து ஏற்கத்தக்கதாக இல்லை. கரணம் இதற்கு ஜமுனா நதி தீர்த்தம் கலக்கப்பட்ட்தால் இப்பெயர் உண்டானதாக யாழ்ப்பாண வைபவமலை தெளிவாகக்கூறுகின்றது. அது மட்டுமல்லாமல் யாழ்ப்பாண ராசதானியின் ஆரம்ப கால மன்னனால் கட்டப்பட்ட இவ்வேரிக்கு எப்படி அதன் இறுதிக்கால மன்னன் ஒருவனின் மனைவியின் பெயர் சூட்டப்டப்பட  முடியும் என்கின்ற வாதங்கள் காணப்படுகின்றன .

    அடுத்ததாக ஜமுனா நதியின் தீர்த்தம் கொண்டு வந்து  கலக்கப்பட்டதாகக் குறிப்பிடுகின்றார் மயில்வாகனப்புலவர். அனாலும் அக்காலம் விஜய நகரப்பேரரசின் எதிரிகளான முஸ்லிம்களின் ஆட்சிப்பரப்பான வட இந்தியாவில் இருந்த ஒரு நதியின் நீர்  எப்படி இங்கே கொண்டுவரப்பட்டிருக்க முடியும். இது காலப்போக்கில் முஸ்லிம் களிட்கும் தென்னிந்தித்ய அரசுக்கும் அல்லது யாழ்ப்பாண அரசிற்கும் இடையில் ஏட்பட்ட இணக்கப்பாட்டினைக் குறிக்கின்றது .

நோக்கம் 

    இந்த ஏரியின் கட்டுமானம் பற்றி  ஆரம்பகாலம் தொட்டு இருந்துவரும் கூற்று இதனை அக்கால தோட்டம்  (இது பிற்க்கலாம் சங்கிலியன் தோப்பு எனப்பட்டிருக்கலாம்) ஒன்றில் அமைக்கப்பட நீர் நிலை என்பதாகும். இது அரச மங்கையர் நீராடும் அந்தப்புரத்து குளியல் இடம் எனக் கருத்துண்டு. அனால் மயில்வாகனப்புலவர் இதனைப்  பொத்தம் பொதுவாக ஸ்னான மண்டபம் என்றே  குறிப்பிடுகின்றார். இதனை சுற்றி சிறிய அளவிலான கட்டடங்கள் இருந்தமைக்கான  சான்றுகள் உள்ளன. 

     மேலும் இந்த ஏரி, பூங்கா  மற்றும் ஏனைய  அரச நிர்வாகப் பகுதிகளிற்கு நீரினைக் கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும் என்கின்ற கருத்துக்களும் உண்டு. குறிப்பாக மந்திரி மனைக்கு இங்கிருந்தொரு சுரங்கம் காணப்படுவதாக கூறப்படுகின்றது . இதனுடைய ஆழம் , அமைப்பு முறை என்பவற்றை நோக்கும்போது இக்கருத்து புலனாகின்றது. மேலும் பிரித்தானியர் காலத்தில் இங்கிருந்து வேறு சில இடங்களிற்கு நீர் கொண்டு செல்லப்பட்டதாக பிரித்தானியக் குறிப்புக்கள் கூறுகின்றன. அது மட்டுமல்லாமல் அண்மைக்காலம் வரைக்கும் அயல்ப்பகுதிகளில் வாழும் மக்கள் இங்கிருந்து நீரைப்  பெற்றுக்கொண்டனர். 

கட்டுமானம்  

     ஜமுனா ஏரி முழுவதுமாக முருகைக்கற்கள் மற்றும் சுண்ணாம்புக் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. வெளிப்பகுதியில் சுற்றிவர  2/3 ஆடி  அகலம் கொண்ட செங்கற்களாலான சுவர் ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. பகர வடிவிலான இதன் தோற்றத்தில் பிரதான பகுதி வடக்கு நோக்கியும் மற்றைய  பகுதிகள் கிழக்குத் தெற்காகவும் காணப்படுகின்றன. இதற்கான வாயில் மேட்குப்பகுதியில் அமையப் பெற்றிருக்கின்றமைக்கான சான்றுகள் உள்ளன. நடுப்பகுதியில் உயர்ந்த ஒரு கட்டுமானம் இருந்தமைக்கான சிதைவுகள் காணப்படுகின்றன. இதன் மேற்குப்புறமாக படிக்கட்டு ஒன்று உள்ளது.

https://amazinglanka.com/wp/yamuna-eri/

சிலைகழும் ஜமுனா எரியும்  

    இங்கே முறையான அகழ்வாய்வுகள் மேட்கொள்ளப்படாத போதிலும் 1992 இல் இங்கே மேற்கொண்ட ஆய்வில் மரத்தாலான அம்மன் சிலை ஒண்று கிடைத்தது. இதன்மூலம்  அக்கால மன்னர்கள் தமது சொத்துக்களை இவ்வேரியில் போட்டுவிட்டு ஓடியதாகக் குறிப்பிடப்படுகின்றது. அனாலும் இக்கருத்து தொடர்பாக சரியான விளக்கம் இல்லை. போர்த்துக்கேயர் காலம் அவர்கள் இந்து ஆலயங்கள் பலவற்றை அழித்தபோது ஆலய சிற்பங்கள் பலவற்றை இவ்வாறான இடங்களில் போட்டு மறைத்தனர் இதற்குச் சான்றாக கைலாசப்பிள்ளையார் ஆலயத்தின் கேணியில் கிடைக்கப்பெற்ற பல சிலைகள் அமைகின்றன. இது போலவே ஜமுனா ஏரிக்குள்ளும் சிலைகள் வந்திருக்க வாய்ப்புண்டு எனலாம்.


 


உசாத்துணைகள் 

யாழ்ப்பாண வைபவமாலை 

முத்துத்தம்பிப் பிள்ளை . ஆ . , 1933,யாழ்ப்பாணச்சரித்திரம் , நாவலர் பதிப்பகம் , யாழ்ப்பணம்.


 

 

 


 

 

 

 

 

அனுராதபுர கால கட்டடங்கள்

அனுராதபுர கால கட்டடங்கள் கி.மு 4ம் நூற்றாண்டில் ஆரிய விஜயனின் வருகையினைத் தொடர்ந்து இலங்கையினுடைய வரலாறு அறியப்படுகின்றது. மகாவம்சம், தீபவம்...